தேடல் என்பது உள்ளவரை.....
இவ்வுலகமும் இவ்வுலகில் வாழும் எல்லா உயிரினமும் தேடலில் தான் இயங்குகிறது. தேடல், மனித வளர்ச்சியின் ஒரு அங்கம். காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்த மனிதன் இன்று கலையிலும் கல்வியிலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கக் காரணம் அவனுள் இருந்த தேடல். பூவை விட்டு பூவைத் தாவி தேனை உண்ணும் வண்டாய் மனிதன் புதிது புதிதாய்த் தேடி வளர்ச்சி கண்டான்.
தேடலின் பிறப்பிடம் தேவை. தேவையைப் பூர்த்திசெய்ய மனிதன் தேடலை ஆரம்பித்தான். மனிதன் உயிர் வாழ உணவு தேவைப்பட்டது. குளிரிலும் வெயிலிலும் இருந்து தன் உடலை காக்க வேண்டியிருந்தது. கடும் மிருகங்களிடம் இருந்து உயிர் பிழைக்க ஒரு அரண் தேவைப்பட்டது. கற்கால மனிதனின் தேடல் இவ்வாறாக தொடங்கியது. தேடலின் பயனாக தீயைக் கண்டறிந்தான். அதை வைத்து உணவு சமைத்தான். உயிர் கொல்லும் மிருகத்திடம் இருந்து தன்னைக் காத்துக்கொண்டான். இலை தழைகளைக் கொண்டு உடம்பை மறைத்தான். மரம் மற்றும் கல் கொண்டு அரண் அமைத்தான். தேடல் மகிழ்ச்சியைப் பரிசாய்த் தந்தது. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? மென்மேலும் மகிழ்ச்சியை சுவைக்கத் தன் தேடலை விரிவாக்கினான். விவசாயம், கல்வி, நாகரிகம், கலை, கலாச்சாரம் எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தான்.
இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்க்கும் தேவை ஒன்றுபோல் இருப்பதில்லை. பசி வந்தால் சிறு குழந்தை அழுகின்றது. அன்னை அதனை அரவணைத்து பால் புகட்டுகிறாள். பசி என்னும் தேவை முடிவடைந்த பிள்ளை சமாதானம் பெறுகிறது. மகிழ்ந்து நிம்மதியாய் உறங்குகிறது. அவ்வளவுதான். குழந்தையாய் இருக்கும்போது நம் அனைவரின் தேவையும் மிகச்சிறியது.
ஆனால், நாகரிக மனிதனாய் உருவெடுக்கும்போது தேவைகள் அதிகமாகின்றன. வாழ்வு சிறக்க அறிவைத் தேடுகிறான். இன்பம் கொண்டாட அன்பைத் தேடுகிறான். வாழ்வை உயர்த்த பணத்தை தேடுகிறான். தனக்கென ஒரு குடும்பத்தை தேடுகிறான். சமுதாயத்தில் மரியாதைக்குரிய இடத்தைத் தேடுகிறான். இவ்வாறு காலத்திற்கேற்ப தேவைகள் விரிவடைகின்றன. தேடல்கள் மாறுபடுகின்றன.
![]() |
| "Exploration is really the essence of human spirit." Frank Borman |
தேடல் நம் வாழ்வை சுறுசுறுப்படையச் செய்யும். வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம் என இருப்பது மடத்தனம். நம் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிய பயணத்தை தொடங்கவேண்டும். அப்பயணம் பல உண்மைப் பாடங்களைக் கற்பிக்கும். இலக்கை நோக்கி பயணிக்கும்போது தடைகள் பல வழிமறைக்கும். வேடந்தாங்கல் நோக்கிப் பல மைல்கள் கடந்து வரும் பறவைக்குத் தான் வரும் வழி முழுக்க மலர்ப்பாதையாய் இருப்பதில்லை. தடைகளைக் களைய வழியைத் தேடவேண்டும். இவ்வாறு தேடல் நம் வாழ்வை சுவாரஸ்யம் ஆக்கும். இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் நுண்ணலை அடுப்பை (microwave oven) கண்டுபிடித்தது பெர்சி ஸ்பென்சர். அவர் அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றியவர். கம்பியில்லா தகவல் தொடர்பில் (wireless communication) அதிக ஆர்வமும் ஈடுபாடும் உடைய அவர் ஒருநாள் ரேடார் செட்டுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறுதலாக ரேடார் கதிர்கள் அவர் சட்டைப்பையில் வைத்திருந்த சாக்லேட் துண்டுகளின் மீது பட அவை உருகியது. இவ்வாறு கோளாறுகள் நிகழ்வது சகஜம் என்பதால் மற்றவர்கள் அதைச் சட்டை செய்துகொள்ளவில்லை. ஆனால் ஸ்பென்சர் அதனை மீண்டும் ஆய்வு செய்தார். ஒரு வேகாத பாப்கார்ன் துண்டினை ரேடார் கதிர்கள் வழியில் வைத்தார். அது வெடித்து வெந்தது. இவ்வாறு சில தேடல்கள் திசைமாறி புது புது கண்டுபிடிப்புகள் உருவாக காரணமாய் அமைந்திருக்கின்றன. அதற்கு எதையும் ஆராயும் ஒரு தேடல் நம்மிடம் இருந்தால் போதும்.
தேடல்கள் பலவகை. தேடல்களில் தேவையற்ற தேடல்களும் உண்டு. அவை கடலில் கரைத்த பெருங்காயம் போன்று நம் வாழ்வை காணாமல் போகச் செய்யும். நாம் அனைவரும் மழலையாய் இருக்கும்போது கதை ஒன்று படித்திருப்போம். வாத்துமடையன் ஒருவன் தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதை. அதைத்தான் தேவையற்ற தேடல் அல்லது பேராசை என்று கூறுவோம். இன்னும் சில தேடல்கள் இருக்கின்றன அவை முட்டாள் தேடல்கள். இல்லாத ஒன்றை தேடி அலைவார்கள். அவற்றுள் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி அலைவது. எவ்வளவு தேடினாலும் கிடைக்காதது மகிழ்ச்சி. ஏனென்றால், தேடி கிடைக்கப்பெறுவது மகிழ்ச்சி அல்ல. அது உருவாக்கப்படுவது. எப்படி உருவாக்குவது என்றுகேட்டால் அன்னை தெரசாவை நினைவுகூருங்கள்.
"உன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழவை. மகிழ்ச்சி உன்னை தேடி வரும்."
தேடல்கள் தான் நம்மை உயிருடன் வைத்திருப்பவை. ஆனால் நமது தேடல் விதைக்குள் விருட்சத்தைத் தேடுவதாய் அமைய வேண்டுமே தவிர கடலில் விழுந்த மழைத்துளியைத் தேடுவதாய் இருக்கக்கூடாது. உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை தேடுங்கள். நம் வாழ்வின் அர்த்தத்தைத் தேடுங்கள். தேடித் தேடி உதவுங்கள். முற்றுப்புள்ளியாற்ற தொடர்கதையாய் இவ்வுலகில் தேடல்!!
__________________ மாற்றம் இனிது _________________
__________________ மாற்றம் இனிது _________________



Realy line are inspired me
பதிலளிநீக்குReally inspired great lines kudos to you my dear friend Kalpana.(The writer of this quotes), all the best for the future blogspots, 😊👍👍
பதிலளிநீக்கு